எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா?
திருக்குறள் எனக்கு பிடிக்குமா..? இல்லையா..?
ஒரு கவிதையோ, கட்டுரையோ எதுவா இருந்தாலும் நமக்கு பிடிக்குதா இல்லையாங்கிற அது நமக்கு புரிஞ்சாதான் முடிவு பண்ண முடியும். திருக்குறள் நமக்கு பிடிக்காதுன்னு சொல்றத விட நமக்கு அது புரியாத காரணத்தால நாம அந்த முடிவ எடுக்குற இடத்துக்கே போகலங்கிறது தான் உண்மை.
திருக்குறள் ஏன் புரியல..?
எனக்கு தெரிஞ்சு தமிழ் இலக்கியங்கள்ல ரொம்பவும் எளிமையான ஒரு இலக்கியம் திருக்குறள் தான். எவ்வளவுக்கு எவ்வளவு குறைஞ்ச சொற்களை பயன்படுத்தி ஒரு திருக்குறள எழுத முடியுமோ அப்படி குறைஞ்ச சொற்களை மட்டும் பயன்படுத்தி வள்ளுவர் திருக்குறளை எழுதிருக்காரு. இருந்தும் ஏன் திருக்குறள் புரிய மாட்டேங்குது அப்படினு கேட்குறீங்களா? எந்த ஒரு இலக்கியமா இருந்தாலும் அதுக்கு நயங்கள் முக்கியம். அதாங்க முதல் எழுத்து ஒன்னுபோல வர்றது (மோனை), இரண்டாவது எழுத்து ஒன்னு போல வர்றது (எதுகை), கடைசி எழுத்து ஒன்னு போல வர்றது (இயைபு) அதுமாதிரி எழுதுறது.
இப்படி சில நயங்களுக்காக சில சொற்களை இடமாற்றி வள்ளுவர், திருக்குறளை எழுதிருக்காரு. அதனால தான் திருக்குறள் எளிமையா இருந்தாலும் அத வாசிக்கும்போது நமக்கு புரிய மாட்டேங்குது. திருக்குறள் ஒரு நேர்க்கோட்டுல அமையாத (Non-Linear) கதை மாதிரி. காட்சிகள் மாறி மாறி வரும். அத நாம கோர்வையா இடம் மாற்றி யோசிக்கும்போது புரியும். அதே மாதிரி திருக்குறள்ல இருக்கிற சொற்களை தேவைக்கேற்ப இடமாற்றி அமைக்கும்போது அது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
எல்லா திருக்குறளும் அப்படி சொற்களை இடமாற்றி அமைச்சதும் நமக்கு புரியுறது இல்ல. அதுக்கு காரணம் அதுல இருக்கிற சில சொற்களுக்கான பொருள் நமக்கு தெரியாதது தான். தமிழ் மொழில பிற மொழி சொற்கள் கலப்பு அதிகமாகிட்டதாலும் பல தமிழ் சொற்களை நாம வழக்கு மொழியில பயன்படுத்தாததும் தான் அந்த சொற்களுக்கான அறிமுகம் நமக்கு இல்லாததுக்கு காரணம். அதிகமா வாசிக்கும்போது தான் புதிய புதிய சொற்கள் நமக்கு அறிமுகமாகும். அதற்கான பொருளை இணையத்தில தமிழ் அகராதியை (Dictionary) பார்த்து தெரிஞ்சிக்க முடியும்.
பரிமேலழகர் திருக்குறள் உரையில ஒவ்வொரு குறளையும் எந்த வரிசையில அதோட சொற்களை அமைச்சு வாசிக்கணும்னு தெளிவா குறிப்பிடப்பட்டிருக்கும். பரிமேலழகர் உரையை பதிவிறக்க
இணையத்தில ஒரு குறளோட தொடக்கத்தை போட்டு தேடும்போது அதற்கு பலர் எழுதின விளக்க உரையோட கிடைக்கும். உதாரணத்துக்கு மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா இவங்களோட உரை ரொம்ப எளிமையா இருக்கும். ஒரு முறை குறளை படிச்சிட்டு அவங்க எழுதியிருக்கிற விளக்கவுரையை வாசிச்சிட்டு திரும்பவும் குறளை படிக்கும்போது ரொம்ப எளிமையா நமக்கு குறள் புரியும். வள்ளுவரோட திறமையை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் வரும். அப்புறம் என்ன திருக்குறள் புரிஞ்சிட்டு அடுத்து பிடிக்குதா இல்லையானு அதுல இருக்குற கருத்துக்களை வச்சி முடிவு பண்ணுங்க. கண்டிப்பா பிடிக்குங்கிறது என்னோட கருத்து..!
திருக்குறள் மட்டுமில்லை. எல்லா தமிழ் இலக்கியமும் இப்படித்தான். ஆனால் திருக்குறளுக்கு நிறைய விளக்கவுரைகள் எளிதில் கிடைக்குங்கிறது தான் கூடுதல் நன்மை. இருந்தாலும் திருக்குறளை படிச்ச பிறகு பிற இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகமாகும். ஆர்வம் தேடுதலுக்கு காரணமாகும். தேடுதல் வழிகளை உருவாக்கும். அந்த பாதை தொடரும்....
வாழ்க தமிழ்..!
வெல்க தமிழ்..!
கருத்துகள்
கருத்துரையிடுக