அழகான மனிதர்கள்

 அழகான மனிதர்கள்




சில கருத்துகள் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபட்டது. என்னோட பார்வையில சரின்னு தோணுறது உங்க பார்வையில தப்பா இருக்கலாம். நான் தப்புனு சொல்றது உங்களுக்கு சரின்னு தோணலாம். சில விசயங்கள நம்மாள நேரடியா இது இதுதான்னு சொல்லிட முடியாது. அது அதபத்தி யார்
சொல்றாங்களோ அவங்களோட சூழ்நிலை, அனுபவம், வயசு, குடும்பம்னு எல்லாத்தையும் பொறுத்து மாறுபடும். உங்களவிட ஒருத்தர் சந்தோசமா இருக்கிறத பார்த்து நீங்க ஏங்கிட்டு இருக்கும்போது உங்கள பார்த்து ஒருத்தர் எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு நினைக்கலாம்.


அழகுங்கிறதும் இத மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் மாறக்கூடியதுதான். நிறைய வகையில அழகும் வரையறுக்கப்படுகிறது. நான் இந்த கட்டுரையில அழகைப் பத்தி பேசப் போறது இல்ல. நான் சந்திச்ச சில அழகான மனிதர்கள பத்தி சொல்லப் போறேன். அவங்களோட வெளித்தோற்றம் இந்த அழகான மனிதர்கள்ங்கிற வார்த்தைக்கு ஒருவேளை பொருந்தலாம். இல்ல பொருந்தாம கூட இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவங்கள அழகுன்னு என்ன சொல்ல வச்சது அவங்களோட செயல்கள்தான்.


சம்பவம் நம்பர் ஒன்னு. கொஞ்ச மாசங்களுக்கு முன்னால டூர் போயிருந்தேன். டூர்னா ஷாப்பிங் இல்லாமலா? அப்படி டூர் போன இடத்துல ஷாப்பிங்கும் போனோம். அப்போ எங்க கூட வந்துருந்த ஒருத்தர் அவரோட பொண்ணு (8 வயசு இருக்கும்) கேட்குற பொம்மை, விளையாட்டு சாமான், சாப்பிடற பொருள்னு எல்லாம் வாங்கி கொடுத்துட்டு இருந்தாங்க. அந்த பொண்ணு கேட்கிறத ரொம்ப பொறுமையா, சந்தோசமா, முழு மனசா வாங்கி கொடுத்துட்டு இருந்தாங்க.


எல்லாம் வாங்கி முடிச்சதும் அந்த பொண்ணு கேட்குற கேள்விக்கு எல்லாம் ரொம்ப அமைதியா பதில் சொல்லிட்டே நடந்து, நாங்க வந்த வண்டிக்கு போயிட்டு இருந்தாங்க. இந்த சம்பவத்த பார்த்த எனக்கு அவர் ரொம்ப அழகா தெரிஞ்சாரு! ஏன்னா நான் இதுக்கு முன்னாடி அவர இப்படி பார்த்ததே இல்ல. அவரு கோபப்படுறது, திட்டுறது, கலாய்க்கிறது, வேலையில பிசியா இருக்கிறது இப்படிதான் அவர பார்த்துருக்கேன். முதல் முறையா அவர் ரொம்ப அமைதியா, பொறுமையா இருக்கிறத பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. அவரோட மகளுக்கு அவர் எவ்ளோ அழகான அப்பாவா இருக்காருங்கிறத பார்த்தப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு!


சம்பவம் நம்பர் ரெண்டு. எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு ரெண்டு பசங்க. அவரோட பொண்ணு வெளியூர்ல வேல பார்க்குறாங்க. பையன் காலேஜ் படிக்கிறான். அவரோட பிறந்தநாளுக்கு மனைவி, மகள், மகன்னு மூணு பேரும் சேர்ந்து ஒரு கிப்ட் ஒண்ணு வாங்கி கொடுத்தாங்க. அந்த பொண்ணால நேர்ல வர முடியலங்கிறதால அவரோட மனைவி அவங்களுக்கு வீடியோ கால் போட்டு போனை அவர் கிட்ட காட்டுறாங்க. பையன் அவர் கிட்ட கிப்ட்டை நீட்டுறான். நான் பக்கத்துல இருந்து பார்த்துட்டு இருக்கேன். அவர் வேகமா கையை நீட்டி அந்த போனை வாங்கினாரு. அந்த கிப்ட்டை அவர் கவனிச்சாரானு கூட எனக்கு தெரியல.


அந்த பையன் கிப்ட்டை பிரிச்சு அவர்கிட்ட காட்டுறான். அதுல விலையுயர்ந்த கைக்கடிகாரம் இருக்கு. அவர் அத வாங்கி பக்கத்துல இருந்த டேபிள்ல வச்சிட்டு பொண்ணு கூட வீடியோ கால்ல பேசிட்டு இருந்தாரு. பொண்ணு கிப்ட் எப்படி இருக்குப்பான்னு கேட்குறாங்க. நல்லா இருக்குமான்னு சொல்லிட்டு அவங்கள பத்தி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு அவர் ரொம்ப அழகா தெரிஞ்சார். அவர் விரும்பின பரிசு அவருக்கு கிடைச்சிருச்சு போலன்னு எனக்கு தோணுச்சு.


சம்பவம் நம்பர் மூணு. ஒருத்தங்களோட திருமண நாள் கொண்டாட்டத்துக்கு போயிருந்தேன். கணவன், மனைவி அவங்களுக்கு ரெண்டு சின்ன குழந்தைகள். அவங்ககூட பேசிட்டு, கிப்ட்லாம் கொடுத்துட்டு கேக் கட்டிங்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அவங்க கேக் கட் பண்ண போனப்போ, அவங்களோட ரெண்டாவது குழந்தை நான்தான் கட் பண்ணுவேன்னு சொன்னான். அவன் கத்திய எடுத்துட்டு கட் பண்ண போனப்போ, மூத்தவனும் சேர்ந்து கொள்ள, அவங்க ரெண்டு பேரும் கேக் மேல கத்திய வச்சிட்டு அழுத்தி கட் பண்ண முடியாம திணற, சட்டுனு அந்த கணவன், மனைவி ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கத்திய பிடிச்சு அழுத்த கேக் அழகா கட் ஆச்சு.


நான் சொல்றத கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்க. சின்ன பையன் கை. அது மேல பெரிய பையன் கை, மனைவி கை, கணவன் கை எல்லாம் ஒண்ணா சேர்ந்து அந்த கேக்கை கட் பண்ணிச்சு. அந்த பிரேமை (Frame) பார்க்கும்போது எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா? அதுல எவ்வளவோ அன்பு, ஐக்கியம், அழகு என் கண்ணுக்கு தெரிஞ்சது. நான் சொன்ன எல்லா சம்பவமுமே உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். நான் ஏதோ மிகைப்படுத்தி சொல்றதா தெரியலாம். இல்ல என்னால அந்த சம்பவங்களை நான் உணர்ந்த விதமா உங்களுக்கு உணர்த்த முடியாம போயிருக்கலாம்.


ஆனா ஒவ்வொரு நாளும் நிறைய, நிறைய சம்பவங்களை நான் இப்படித்தான் உணர்றேன். ஒவ்வொருத்தரும் என் கண்ணுக்கு சில விசயங்கள்ல அழகா தெரியுறாங்க. நிறைய அழகழகான பிரேம்களை கடவுள் என் கண்ணுல காட்டுறாரு. எனக்கு பிடிக்காதவங்க கிட்ட கூட எனக்கு பிடிச்ச நிறைய குணங்கள் இருக்கிறத நான் பொறுமையா உட்கார்ந்து யோசிச்சு பார்க்கும்போது எனக்கு புரியுது.


நாம பார்க்கிற எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல அழகானவங்கதான். நமக்கு புடிச்சவங்க மட்டும் இல்ல; நமக்கு புடிக்காதவங்க, நம்மள புடிக்காதவங்கன்னு எல்லாருமே அழகானவங்கதான். நம்மளோட சூழ்நிலையில அவங்க வில்லனா தெரியலாம். ஆனா அவங்களோட தரப்புல அவங்க கதாநாயகர்கள்தான். ஒருத்தங்களை பத்தி தீர்மானிக்கிறதுக்கு முன்னாடி அவங்களோட இடத்துல உங்கள பொருத்தி பார்த்து முடிவெடுங்க. நீங்க ரொம்ப ரொம்ப அழகானவங்களா மாறிடுவீங்க..!




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.