காதல் தீ..!





கவிதைகள் நமக்கு பிடிக்கணும்னா அதுல சொல்லப்பட்டிருக்கிற உவமைகளும் ஒப்பீடும் வித்தியாசமா இருக்கணும்; அதே நேரத்துல எளிமையா இருக்கணும். அப்படி இருக்கிற கவிதைகள் நிச்சயமா எல்லாரையும் கவரும். இந்த குறள பாருங்க.


‘நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டு பெற்றாள் இவள்’


சின்ன வயசுல தீயை பார்க்கும் போது நாம எல்லாரும் வேகமா அத தொட முயற்சி பண்ணிருப்போம். நம்ம அம்மா ‘வேணாம்மா தீ கிட்ட போகாதா சுட்டுரும்’ அப்படின்னு சொல்லிருப்பாங்க. சிலர் அதையும் கேட்காம இன்னும் கிட்ட போய் சூடு கூட வாங்கிருப்போம். இப்போ நம்ம எல்லாருக்கும் தெரியும். தீ கிட்ட போகப் போக அதோட வெம்மை அதிகமா இருக்கும். ரொம்ப கிட்ட போனா சுட்டுரும்னு. தள்ளி நிற்கும் போது அதோட வெம்மை நமக்கு தெரியாது. இதுதான் தீயோட பண்பு.


ஆனா வள்ளுவர் இந்த குறள்ல காட்டுற தீ ரொம்பவே வித்தியாசமானது. அது காதலி கிட்ட இருக்கிற தீ. இந்த தீயோட தன்மை தள்ளிப்போகும் போது சுடுதாம். கிட்ட வரும்போது குளிருதான். வள்ளுவரே கூட ஆச்சரியப்படுறாரு. இந்த மாதிரி ஒரு தீயை இவ எங்க இருந்து பெற்றாள்னு ஒரு கேள்வியோட தான் இந்த குறள முடிக்கிறாரு. ரொம்பவே வித்தியாசமான ஒரு ஒப்பீடுல்ல. 


ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் தனித்தனியா இருக்கும்போது நெருப்ப எரிய வைக்கிற தன்மையோட இருக்கும். அதுவே ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்து தண்ணியா (H2O) இருக்கும் போது அதோட தன்மை அப்படியே மாறிடும். நெருப்ப அணைக்க ஆரம்பிச்சுரும். அதே மாதிரிதான் வள்ளுவர் இந்த குறள்ல நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட தீயோட பண்பு காதலோட கலக்கும் போது எதிர்மறையா இருக்கிறத காட்டுறாரு. 


இந்த தீயை காதலிக்கிறவங்க கண்டிப்பா உணர்ந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்கதான் சொல்லணும் வள்ளுவர் சொன்ன மாதிரி கிட்டபோகும்போது குளிராவும் தூரமா போகும்போது வெப்பமாகவும் ஒரு தீ; காதல் தீ இருக்கான்னு…!


இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்


நீங்கின் - நீங்கும் போது; தெறு - சுடு (தெறும் - சுடும்); குறுகுங்கால் - குறுகும்போது, அருகில் வரும்போது; தண் - குளிர்ச்சி; யாண்டு - எங்கு


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டு பெற்றாள் இவள்


பொழிப்பு (மு வரதராசன்): நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?


இந்த குறளை புதுக்கவிதை வடிவில் படிக்க காதல் தீ (புதுக்கவிதை)


வாழ்க தமிழ்..!

வெல்க தமிழ்..!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகான மனிதர்கள்

காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும்..!

அவள் முழுமையான அழகி..! டாட்.