நோயும் அவளே! மருந்தும் அவளே!
நம்ம எல்லாராலயும் 2020-வது ஆண்டை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுக்கு அப்புறம் கேட்டாலும் கூட கொரோனா, ஊரடங்கு, கொத்து கொத்தா மரணம், பயம், வேலை பறிபோனது, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்ததுன்னு 2020-ம் ஆண்டை பற்றி பக்கம் பக்கமா சொல்லுவோம். ‘என்ன தம்பி! அதவேற ஞாபகப்படுத்திட்டீங்க நெஞ்செல்லாம் புண்ணாருக்குனு’ சொல்றீங்களா? கேட்குது.. கேட்குது…
கொரோனா மட்டுமில்ல இந்த உலகம் அம்மைநோய், காலரா, பிளேக் அது இதுன்னு ஏகப்பட்ட நோயை அனுபவிச்சிருக்கு. இப்படி புதுசு புதுசா நோய் பரவும்போது அந்த நோயை கட்டுக்குள்ள கொண்டுவரவும் தொடர்ந்து பரவாம இருக்கவும் நடவடிக்கை எடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அதுக்கு மருந்து கண்டுபிடிப்பாங்க. அப்படித்தான் கொரனாவுக்கும் முடிஞ்ச அளவு வேகமாக தடுப்பூசி கண்டுபிடிச்சு கட்டுக்குள்ள கொண்டுவந்தாங்க. அப்புறம் அது புதுசு புதுசா, தினுசு தினுசா உருமாறி 2-வது அலை, 3-வது அலைன்னு வந்துட்டு இருந்துச்சு. இன்னும் வந்துட்டு இருக்கு. சரி அத விடுங்க! நம்ம திருக்குறளுக்குள்ள வருவோம்.
திருவள்ளுவர் இந்த குறள்ல ஆதி மனிதன் என்னைக்கு தோன்றினானோ அன்னைக்கு தோன்றின ஒரு நோயை பற்றி சொல்றாரு. எல்லாம் உங்களுக்கு நல்லா பழக்கப்பட்ட நோய் தான். நீங்க கூட ஒண்ணுக்கு பல தடவை இந்த நோயால தாக்கப்பட்டிருக்கலாம். அதாங்க காதல் நோய்..!
‘இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து’
இந்த நோய் காதலியோட பார்வையில இருந்து பரவுதாம். நான் சொல்லல, வள்ளுவர் சொல்றாரு. மைதீட்டின இவ கண்ணுக்குள்ள இரண்டு விதமான பார்வை இருக்கு. ஒண்ணு நோய் தருகிறது. இன்னொரு பார்வை அந்த நோய்க்கு மருந்து போடுதுன்னு.
நோய் வராம முன்கூட்டியே தடுக்குறதுக்காக போடப்படுற தடுப்பூசியில அந்த நோயக்கான கிருமிகள் தான் வீரியம் குறைஞ்சதாவோ, அல்லது உயிரற்றதாவோ இருக்கும். அதன் மூலமா நம்ம உடலே அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கும். இது வள்ளுவருக்கு தெரிஞ்சதாலதான் நோய் தர்ற அவ பார்வைதான் மருந்தும் கூடனு எழுதிருப்பாரோ என்னவோ?
இப்படி ஒரு பார்வையில நோய் தந்து நாம அவதிப்படுறத பார்த்து மனம் வருந்தி இன்னொரு பார்வையில மருந்து போடுற காதலியோ, காதலனோ உங்களுக்கு இருக்காங்களா? உங்களுக்கு அந்த நோய் வந்திருக்கா? காதல் நோய் கொரோனா மாதிரி கொடூரமானதா? இல்ல சுகமானதா? நீங்க தான் சொல்லணும்…
இன்பத்துப்பால்: களவியல், அதிகாரம் 110 குறிப்பறிதல்
உண்கண் - மையுண்ட கண் (மை தீட்டிய விழிகள்)
நோக்கு - பார்வை
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து
பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.
இந்த குறளை புதுக்கவிதை வடிவில் படிக்க அவளது பார்வை
வாழ்க தமிழ்..!
வெல்க தமிழ்..!
எந்நோக்கினாலும் நோக்கம் ஒன்றே....
பதிலளிநீக்கு😁